விளையாட்டு

“கவலையில் முடங்கியிருந்தபோது டிராவிட் சொன்ன வார்த்தைகள்” - ரெய்னா உருக்கம்

“கவலையில் முடங்கியிருந்தபோது டிராவிட் சொன்ன வார்த்தைகள்” - ரெய்னா உருக்கம்

webteam

தனது முதல் போட்டியில் பூஜ்ஜியம் ரன்னில் அவுட்டாகி கவலையில் இருந்தபோது ராகுல் டிராவிட் ஊக்கப்படுத்தியதை ரெய்னா நினைவு கூர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கடந்த சுதந்திர தினத்தன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். முன்னாள் கேப்டன் தோனி ஓய்வை அறிவித்த சில நிமிடங்களிலேயே ரெய்னாவும் தனது ஓய்வை அறிவித்து, தோனியுடனான நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் தனது சர்வதேச கிரிக்கெட்டின் முதல் போட்டியன்று ஏற்பட்ட அனுபவத்தை ரெய்னா பகிர்ந்துள்ளார். அவர்கூறும்போது, “2005ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக முதன்முறையாக சர்வதேச போட்டியில் பங்கேற்றேன். அன்று முத்தையா முரளிதரன் வீசிய முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆகினேன். அதனால் நான் சோகத்தில் மூழ்கி இருந்தேன். எனது கவலையை தோனி மற்றும் இர்ஃபானிடம் பகிர்ந்தேன். அப்போது ராகுல் பாய் என்னிடம் வந்து, நீ ஏன் கவலையாக இருக்கிறாய் ? என்று கேட்டார். நான் முதலில் போட்டியிலேயே டக் அவுட் ஆனதையும், எனது பெற்றோர் நண்பர்கள் எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும்போது நான் நாட்டிற்காக ஒரு ரன் கூட எடுக்கவில்லை எனக் கூறி வருந்தினேன்.

அப்போது எனக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசிய ராகுல் பாய், நீ இந்தப் போட்டியில் தானே அவுட் ஆகினாய். அடுத்த போட்டி இருக்கிறதே. அதிலும் இப்படியா அவுட் ஆகப் போகிறாய். உன்னிடம் நான் சிறந்த ஃபீல்டிங்கை பார்த்தேன். போ எனக்காக எதையாவது செய்து காட்டு என்றார். அதன்பின்னர் ஜாகீர் கான் வீசிய பந்தில் நான் மார்வன் அட்டப்பட்டுவை ரன் அவுட் ஆக்கினேன். அப்போது ஜாகீர் மற்றும் ராகுல் என இருவரும் என்னை கட்டித் தழுவிக்கொண்டனர். அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது. அதன்பின்னர் நீண்ட காலம் நான் இந்தியாவிற்காக விளையாடினேன்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.