பெண்களுக்கான டி20 சேலஞ்சர்ஸ் தொடரின் முதல் போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடர் பரப்புடன் சென்றுகொண்டிருக்கிறது. லீக் போட்டிகள் முடிவுற்று, தகுதிச் சுற்றுகளின் முதல் போட்டி நாளை தொடங்குகிறது. இன்றைய தினம் எந்தப் போட்டியும் இல்லை. தொடர்ந்து ஐபிஎல் பார்த்து வந்த ரசிகர்கள் இன்று போட்டியில்லாமல், நாளைக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் அவர்களது கவனம் பெண்கள் டி20 சேலஞ்சர்ஸ் போட்டியின் பக்கம் திரும்பியுள்ளது.
ஐபிஎல் தொடர் போன்று மினி ஐபிஎல் தொடராக கடந்த ஆண்டு பெண்கள் டி20 சேலஞ்சர்ஸ் தொடர் நடத்தப்பட்டது. அந்தத் தொடர் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், இந்த ஆண்டு 2வது தொடர் இன்று ஜெய்பூரில் தொடங்கியுள்ளது. இந்த முறை கவனத்தை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஐபிஎல் விதிமுறைகள் பெண்கள் டி20 சேலஞ்சர்ஸ் போட்டியிலும் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு தொடங்கும் தொடர், வரும் சனிக்கிழமை முடிவடைகிறது. மூன்று அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியில் ஒவ்வோரு அணியும் தலா ஒரு போட்டிகளில் மோதி, அதில் முதலிடம் பிடிக்கும் இரண்டு அணிகள் இறுதிப்போட்டியில் மோதும்.
இன்றைய போட்டியில் சூப்பர்நோவாஸ் மற்றும் டிரைல்பிளேசர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சூப்பர்நோவாஸ் அணி முதலில் பந்துவீசியது. இதனால் முதல் பேட்டிங் செய்த டிரைல்பிளேசர்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கேப்டன் ஸ்மிரிதி மந்தனா 90 (67) ரன்கள் விளாசினார். ஹர்லீன் டியோல் பொறுமையாக விளையாடி 44 பந்துகளில் 36 ரன்கள் சேர்த்தார். சூப்பர்நோவாஸ் அணி சார்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
141 என்ற இலக்கை எதிர்த்து விளையாடி வரும் சூப்பர்நோவாஸ் அணியில், தொடக்க வீராங்கனை பிரியா புனியா 1 (6) ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். அதைத்தொடர்ந்து சமாரி அதாபத்து 26 (34) மற்றும் ஜெமிமஹா 24 (19) ரன்களில் ஆட்டமிழந்தனர். நடாலி ஸைவெர் ஒரு ரன் மட்டுமே எடுத்து நடையைக்கட்டினார். கேப்டன் ஹர்மன்ப்ரீத் அணிக்காக போராடி வருகிறார்.