சன்ரைசர்ஸ் அணி தற்போதுதான் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளநிலையில், அந்த அணியின் ஆல்ரவுண்டரான தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அடுத்த இரண்டு போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி மும்பை மற்றும் புனேவில், கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை, 21 சூப்பர் லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகளுக்கு எதிரானப் போட்டிகளில் தோல்வியடைந்தநிலையில், சென்னை அணிக்கு எதிரானப் போட்டியில் வெற்றிப்பாதைக்கு திரும்பியது.
குறிப்பாக அந்தப் போட்டியில் தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜனின் பங்களிப்பு வெற்றிக்கு வழிவகுத்தது. இதையடுத்து நேற்று நடந்த குஜராத் அணிக்கு எதிரானப் போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணி சிறப்பாக விளையாடி 2-வது வெற்றியை பதிவுசெய்தது. தோல்வியே சந்திக்காத குஜராத் அணியை, சன்ரைசர்ஸ் அணி திறமையான ஆட்டத்தின் மூலம் சுருட்டியது.
இந்நிலையில், வெற்றி பாதைக்கு திரும்பி இருக்கும் அந்த அணிக்கு தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் பலம் வாய்ந்த ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் அடுத்த சில போட்டிகளில் காயம் காரணமாக விளையாடமாட்டார் என அந்த அணியின் பயிற்சியாளர் டாம் மூடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து டாம் மூடி கூறுகையில், "வாஷிங்டன் சுந்தருக்கு கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டு உள்ளது. அதுகுறித்து பிசியோதெரபிஸ்ட் கவனித்து வருகின்றனர். இதனால் அவர் பந்துவீசுவது வீசுவது கடினம். அவர் குணமாக சுமார் ஒரு வாரம் ஆகலாம் " என தெரிவித்துள்ளார்.
இதனால் இந்த வாரம் வெள்ளிக்கிழமை கொல்கத்தாவுக்கு எதிரானப் போட்டியிலும், ஞாயிறன்று பஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியிலும் வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளது உறுதியாகியுள்ளது. இதேபோல் நேற்றையப் போட்டியில் ரிட்டயர்டு ஹர்ட் ஆன ராகுல் திரிபாதிக்கு பெரிதாக காயங்கள் ஏதும் இல்லாததால், அடுத்தப் போட்டியில் அவர் பங்கேற்பார் என்றும் பயிற்சியாளர் டாம் மூடி கூறியுள்ளார்.