மும்பை இண்டியன்ஸுக்கு எதிராக நேற்றிரவு நடந்த போட்டியில் ஐதராபாத் அணி, திரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 7 வது லீக் போட்டி, ஐதராபாத்தில் நேற்று நடந்தது. இதில் மும்பை இண்டியன்ஸ் அணியும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. மும்பை அணியில் கடந்த போட்டியில் காயமடைந்த ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக சங்வான் சேர்க்கப்பட்டிருந்தார்.
டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் கேனே வில்லியம்சன் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய மும்பை அணி ஐதராபாத்தின் நேர்த்தியான பந்துவீச்சில், ரன் எடுக்க முடியாமல் திணறியது. அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.
கேப்டன் ரோகித் 11 ரன்கள், லெவிஸ் 29 ரன்கள், இஷான் கிஷான் 9 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 28 ரன்கள், குணால் பாண்டியா 15 ரன்கள், பொல்லார்ட் 28 ரன்கள் எடுத்தனர். ஐதராபாத் அணியின் சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா, ஸ்டேங்கில் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். ரஷித் கான், நான்கு ஓவர்கள் வீசி, 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய ஐதராபாத் அணி, தொடக்கத்திலேயே அதிரடி காட்டியது. சஹாவும் ஷிகர் தவானும் அடித்து ஆடினர். இவர்கள் இருவரையும் இளம் சுழல் மார்க்கண்டே, வீழ்த்தினார். சஹா 22 ரன்களும் தவான் 28 பந்துகளில் 45 ரன்களும் எடுத்தனர். அடுத்து வந்த மனீஷ் பாண்டே (11 ரன்) ஷாகிப் அல் ஹசன் (12) ஆகியோரின் விக்கெட்டையும் மார்க்கண்டே வீழ்த்த அந்த அணி தடுமாறியது.
(போட்டியை பார்க்க வந்த நடிகை சார்மி)
கேப்டன் வில்லியம்சன் 6 ரன்னிலும் யூசுப் பதான் 14 ரன்னிலும் ரஷித் கான், சந்தீப் சர்மா, கவுல் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டாக, வெற்றி மும்பை பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரை பென் கட்டிங் வீசினார். எதிர்கொண்ட தீபக் ஹூடா, முதல் பந்தை சிக்சருக்குத் தூக்கினார். அடுத்த 4 பந்தில் 4 ரன்கள் கிடைத்தது. கடைசி பந்தில் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டபோது ஹூடா பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார்.
மும்பை தரப்பில் மார்க்கண்டே 4 விக்கெட்டையும், முஸ்தபிஷூர் ரஹ்மான் 3 விக்கெட்டையும் பும்ரா 2 விக்கெட்டையும் விழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருது ரஷித் கானுக்கு வழங்கப்பட்டது.