விராட் கோலியின் விடுப்பு குறித்து கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் துவங்குவதற்கு இன்னும் ஒருவாரம் இருக்கும் நிலையில், விராட் கோலி தனது மனைவியின் பிரசவத்திற்காக முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்பும் செய்தி கவனம் பெற்றுள்ளது. எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் மாற்று வீரராக ரோஹித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சிமாநாட்டின் போது, மூத்த விளையாட்டு எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அயாஸ் மேமனுடன் உரையாடியபோது, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது விராட் கோலியின் விடுப்பு குறித்து பேசினார்.
“முன்பெல்லாம் எங்களால் இப்படிப் போய்விட்டு வர முடியாது. சுனில் கவாஸ்கர் தன்னுடைய மகனைப் பல மாதங்களாகப் பார்க்கவில்லை. அது வேறு சூழல், இப்போது நிலைமை மாறிவிட்டது. கோலியை எடுத்துக்கொண்டால் அவருடைய அப்பா இறந்தபோது அடுத்த நாளே அவர் ஆட வந்துவிட்டார். இப்போது அவர் தன்னுடைய குழந்தை பிறப்புக்காக லீவு எடுக்கிறார். நல்லதுதான். இப்போது அப்படிச் செய்ய முடிகிறது. முன்பு அப்படி அல்ல.
இந்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு, அவர்கள் நினைத்துக் கூட பார்க்காத சலுகைகள் வாரி கொடுக்கப்படுகிறது. இவர்களால் ஒரு விமானத்தை வாங்கி, தனது குடும்பத்தை பார்த்துவிட்டு மூன்று நாட்களில் திரும்பிவர முடியும்.
கிரிக்கெட்டின் வளர்ச்சியை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். கோலிக்கு, கிரிக்கெட்டில் உள்ள ஆர்வத்தை விடக் குழந்தையை ஏந்தும் ஆர்வம்தான் அதிகம் இருக்கிறது என்பதை உணர்கிறேன், மதிக்கிறேன்” எனத் தெரிவித்தார்.