விளையாட்டு

''கேட்சுகளை விட்டு இந்திய வீரர்கள் கிறிஸ்துமஸ் பரிசு தருகின்றனர்'' - சுனில் கவாஸ்கர்

''கேட்சுகளை விட்டு இந்திய வீரர்கள் கிறிஸ்துமஸ் பரிசு தருகின்றனர்'' - சுனில் கவாஸ்கர்

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணி உடனான முதல் டெஸ்ட் போட்டியில் அடிலெய்ட் மைதானத்தில் விளையாடி வருகிறது. பகலிரவு ஆட்டமாக நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 244 ரன்களும், ஆஸ்திரேலியா 191 ரன்களும் குவித்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 62 ரன்கள் முன்னிலையோடு உள்ளது. 

இந்நிலையில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்தியா ஃபீல்டிங் செய்த போது நான்குக்கும் மேற்பட்ட கேட்ச்களை கோட்டை விட்டது. விக்கெட் கீப்பர் சாஹா, ஃபீல்டர்கள் பிருத்வி ஷா, பும்ரா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் கேட்ச்களை பிடிக்காமல் மிஸ் செய்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி ஆதாயம் பெற்றது. அந்த அணியின் பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷேன் கொடுத்த மூன்று கேட்ச் வாய்ப்புகளை இந்தியா தவற விட்டது குறிப்பிடத்தக்கது. 

“இந்திய வீரர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதனால் தான் முன்கூட்டியே தங்களது கிறிஸ்துமஸ் பரிசுகளை கேட்ச் வாய்ப்பை வீணடித்ததன் மூலம் கொடுத்து வருகிறார்கள்” என காட்டமாக இந்திய அணியின் ஃபீலடிங்கை விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். 

மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் நைட் வாட்மேனாக களம் இறங்கிய பும்ராவையும் சுனில் கவாஸ்கர் கலாய்த்துள்ளார். “30 - 40 ஆண்டுகளுக்கு பிறகு பும்ரா தன் பேர பிள்ளைகளிடம் இந்தியாவுக்காக நான் 3வது பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடியுள்ளேன்” என சொல்வார். ஆனால் எந்த சூழ்நிலையில் அவர் களம் இறங்கினார் என்பதை சொல்லமாட்டார் என தெரிவித்துள்ளார்.