விளையாட்டு

ஆதரவு கொடுத்தால் உயிரையும் கொடுப்போம்: சுனில் சேத்ரி

ஆதரவு கொடுத்தால் உயிரையும் கொடுப்போம்: சுனில் சேத்ரி

webteam

ரசிகர்கள் ஆதரவு இருந்தால் களத்தில் உயிரையும் கொடுப்போம் என இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு இருக்கும் வரவேற்பு மற்ற விளையாட்டுகளுக்கு இருப்பதில்லை. இந்திய அணி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியானாலும், ஐபிஎல் போன்ற கிரிக்கெட் தொடர்கள் என்றாலும் பெரிய அளவில் ரசிகர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கிறது. ஆனால் மற்ற விளையாட்டு போட்டிகள் நடக்கும் மைதானத்திற்கு கூட ரசிகர்கள் வருவதில்லை. இந்த வேதனையை, இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி உருக்கமான வீடியோவாக பதிவிட்டிருந்தார்.

அவரது இந்த பதிவுக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்திருந்தனர். கிரிக்கெட் பிரபலங்களும் தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்தியாவில் தற்போது இன்டர்காண்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டி நடைப்பெற்று வருகிறது. சுனில் சேத்ரி தனது வருத்தத்தை வீடியோ மூலமாக ட்விட்டரில் பதிவிட்டார். இதனால் இந்தியா - கென்யா அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டிக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

மும்பையில் நடைபெற்ற கென்ய அணியுடனான போட்டி, சுனில் சேத்ரியின் 100 ஆவது போட்டி. நேற்று நடைப்பெற்ற போட்டியை பாலிவுட் பிரபலம் அபிஷேக் பச்சன், சுனில் சேத்ரியின் மனைவி சோனம் பட்டாச்சார்யா உள்ளிட்ட ஏராளமானோர் கண்டு களித்தனர். இந்தப்போட்டியில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை பதிவு செய்தது. போட்டிக்கு பின்னர் சுனில் சேத்ரிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுனில் சேத்ரி “  இந்த இரவு எனக்கு சிறப்பானது ஏனென்றால் நாம் ஒன்றிணைந்துள்ளோம். இந்தியாவுக்காக நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் நீங்கள் இதுபோன்று ஆதரவு தெரிவித்தால் நாங்கள் களத்தில் எங்களின் உயிரையும் கொடுப்போம். மைதானத்தில்  எங்களை உற்சாகப்படுத்தியவர்களுக்கும் வீட்டில் இருந்தபடி ஆதரவளித்தவர்களுக்கும் நன்றி” என அதில் கூறியுள்ளார்.