ஐசிசி விதிமுறைகளை மீறியதாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடுக்கு, ஆட்ட நடுவரும் அவருடைய தந்தையுமான கிறிஸ் பிராட் அபராதம் விதித்தார்.
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ரசிகர்கள் இன்றி நடக்கும் இந்த தொடரின் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இப்போட்டியின் 2-வது இன்னிங்ஸில் ஐசிசி விதிமுறைகளை மீறியதாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
யாசிர் ஷாவை விக்கெட் செய்தபின் அவரிடம் ஸ்டூவர்ட் பிராடு தகாத வார்த்தைகளைக் கூறியதாக புகார் அளிக்கப்பட்டது. புகார் குறித்து ஆட்ட நடுவர் கிறிஸ் பிராட் விசாரித்தார். இவர், ஸ்டூவர்ட் பிராட்டின் தந்தை ஆவார். நடுவரான தந்தை முன் முன் ஆஜரான ஸ்டூவர்ட் பிராட், தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு அபராத தொகையைச் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து பிராட்டின் போட்டி ஊதியத்திலிருந்து 15% அபராதம் விதித்தார் கிறிஸ் பிராட் . இதன்மூலம் ஒரு தகுதி இழப்பு புள்ளியை ஸ்டூவர்ட் பிராட் பெற்றுள்ளார். கடந்த 24 மாதங்களில் இதுபோல மூன்றாவது முறையாகத் தண்டனை பெற்று மொத்தமாக மூன்று அபராதப் புள்ளிகளுடன் உள்ளார். கொரோனா காரணமாக டெஸ்ட் தொடரில் வெளிநாட்டு நடுவர்கள் இடம்பெறவில்லை. உள்நாட்டு நடுவர்களே பணியாற்றி வருகிறார்கள்.