‘மெஸ்சி’ கால்பந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பெயர். இன்று இந்தப்பெயர் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. நட்சத்திர வீரர்கள் பொதுவாக ஒரு சில போட்டிகளில் சோபிக்க தவறும் போது ரசிகர்கள் அர்ச்சனை செய்து வாடிக்கை. தற்போது இதே நிலைதான் அர்ஜெண்டினாவின் மெஸ்சிக்கு ஏற்பட்டுள்ளது.
கால்பந்தாட்டத்தில் இவருக்கு சக போட்டியாளராக விளங்கும் ரோனால்டோ தனது அதிரடி ஆட்டத்தால் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் தனது அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் 4 கோல்கள் அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். ஆனால் மெஸ்சி தொடர்ந்து தடுமாறி வருகிறார். இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளில் மெஸ்சி ஒரு கோல் கூட பதிவு செய்யவில்லை. கிளப் அணிகளுக்கு பல்வேறு கோப்பைகளை தேடி தந்த மெஸ்சி தனது தேசிய அணிக்காக கோப்பையை பெற்று தந்ததில்லை. பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஜெர்மனியிடம் கோப்பையை இழந்ததையடுத்து மெஸ்சி மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
தன் மீதான கறையை துடைத்து தேசிய அணிக்கு கோப்பையை வென்று தரும் நோக்கில் மெஸ்சி இந்த உலக்கோப்பை தொடரில் களமிறங்கினார். ஆனால் லீக் தொடரில் அர்ஜெண்டினா அணி தனது முதல் போட்டியில் ஐஸ்லாந்திற்கு எதிராக 1-1 என டிரா செய்தது. இந்தப்போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்சி வீணடிக்க, போட்டி சமனில் முடிந்தது. குரேஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது. தற்போது மெஸ்சிக்கு எதிரான இணையத்தில் கால்பந்து ரசிகர்கள் பொங்கி வருகிறார்கள். எல்லா நேரத்திலும் சிறந்த வீரர் என்ற போட்டி மெஸ்சிக்கு- ரோனால்டோவுக்கு இடையே நிலவி வருகிறது. Greatest Of All Time ஆங்கிலத்தில் சுருக்கமாக GOAT என்று அழைக்கின்றனர். இந்நிலையில் மெஸ்சியின் மோசமான ஆட்டத்தால் கோபமடைந்த ரசிகர்கள் மெஸ்சி GOAT அல்ல Sheep என ட்விட்டரில் கடுமையாக சாடிவருகின்றனர். மெஸ்சி குறித்து ஏராளமான கேலி சித்திரங்களை பதிவிட்டு வருகின்றனர்.
மெஸ்சி தனது மேஜிக்கால் பலமுறை வெற்றியை ஈட்டி தந்துள்ளார். மெஸ்சி அர்ஜெண்டினாவின் ஒரு வீரர் அவரால் மட்டுமே அணிக்கு ஒட்டுமொத்தமாக வெற்றியும் ஈட்டிதர இயலாது. அணியின் கூட்டு முயற்சியால் மட்டுமே வெற்றி பெற முடியும். அர்ஜெண்டினா அணி இந்த முறை உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப்பெற்றதும் மெஸ்சியின் மேஜிக்கால்தான். தகுதிச் சுற்றின் கடைசிப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து, அர்ஜென்டினாவை உலக்கோப்பை தொடருக்கு அழைத்து வந்தார் என்பதை மறந்து விடக்கூடாது. அதுபோன்ற ஒரு ஆட்டத்தைதான் மெஸ்சியிடம் அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்கிறார்கள். மீண்டு வாருங்கள் மெஸ்சி....