இறுதிப்போட்டிக்குள் நுழையும் முதல் போட்டியாளரை தீர்மானிக்கவுள்ள QUALIFIER 1 இல் மோதும் டெல்லி மற்றும் மும்பை அணிகளின் பலம், பலவீனம்...
சீசனின் தொடக்கம் முதலே மிரட்டலான ஆட்டத்தால் ஆதிக்கம் செலுத்தி வருகிறது, மும்பை அணி. அதிரடியான பேட்டிங் மேல்வரிசை, முத்திரை பதிக்கும் மத்திய கள வீரர்கள், திணறடிக்கும் பந்து வீச்சாளர்கள் என அனைத்து துறைகளிலும் வலுவாக உள்ளது மும்பை இண்டியன்ஸ். டிகாக், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பான அடித்தளமிடும் வீரர்களாக உள்ளனர்.
இவர்கள் தடுமாறும் பட்சத்தில் ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஹர்திக் பாண்ட்யா, கெய்ரன் பொல்லார்டு, க்ருனால் பாண்ட்யா ஆகிய மத்திய கள வீரர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர். கேப்டன் ரோகித் சர்மாவின் காயம் அணிக்கு பின்னடைவு. அவ்வப்போது களமிறக்கப்படும் சவுரப் திவாரியும் ஆறுதலான பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
பந்து வீச்சைப் பொருத்தவரையில் உலகத்தரம் வாய்ந்த பும்ரா, போல்ட், பேட்டின்சன் ஆகியோர் தங்கள் வேகத்தால் எதிரணிக்கு கலக்கத்தை ஏற்படுத்துகின்றனர். இளம் சுழல் சூத்திரதாரியான ராகுல் சாஹர் மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்தும் துருப்புச் சீட்டாக உள்ளார்.
சீசனின் தொடக்கத்தில் அடுக்கடுக்கான வெற்றிகளைப் பதிவு செய்த டெல்லி அணி, இரண்டாம் பாதியில் இறங்கு முகத்தில் சென்றது. மிக முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் பெங்களூருவை வீழ்த்தியதன் மூலம் பிளே ஆஃப் பந்தயத்தில் இணைந்து கொண்டது அந்த அணி.
பேட்டிங்கில் ஷிகர் தவன், ரஹானே, ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் பலமாக பார்க்கப்பட்டாலும், இளம் வீரர் பிரித்திவி ஷாவின் பொறுப்பற்ற ஆட்டம் பெரும் பலவீனமாக உள்ளது. மத்திய கள வீரர்களான ரிஷப் பந்த், ஆல்ரவுண்டர்கள் ஸ்டாய்னிஸ், டேனியல் சாம்ஸ், அக்ஸர் படேல் ஆகியோர் ரன் வேகத்தை உயர்த்த கைகொடுக்கின்றனர்.
பந்துவீச்சில் தென்னாப்ரிக்க வேகப்புயல்கள் ரபாடாவும், நார்கியாவும் எதிரணியினரை கலங்கடித்து வருகின்றனர். அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கும் ஆயுதமாக உள்ளார். 5 ஆவது பந்துவீச்சாளராக சேர்க்கப்படும் வீரர்கள் ரன்களை அதிகளவில் விட்டுக்கொடுப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இரு அணிகளுமே கோப்பை வெல்லும் வாய்ப்புள்ள அணிகளாக வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளதால், இப்போட்டியில் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.