விளையாட்டு

இரட்டை சதம் விளாசல் - சச்சின் சாதனையை முறியடித்தார் ஸ்மித்

இரட்டை சதம் விளாசல் - சச்சின் சாதனையை முறியடித்தார் ஸ்மித்

webteam

ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அசத்தியுள்ளார். 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ளது. இதில் ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும் மற்றொரு போட்டியில் இங்கிலாந்து அணியும் வென்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது. 4ஆவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 

2ஆவது டெஸ்ட் போட்டியில் ஆர்ச்சர் பந்தினால் தாக்கப்பட்ட ஸ்மித் ஓய்விற்கு பிறகு இப்போட்டியில் களமிறங்கினார். இவர் இந்தப் போட்டியில் தனது சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்தப் போட்டியில் தனது 26ஆவது சதத்தை கடந்து ஸ்மித் விளையாடி வருகிறார். இதன்மூலம் குறைவான இன்னிங்ஸில் 26 சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ஸ்மித் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். 

இப்பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்த இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஸ்மித் முறியடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 136 இன்னிங்ஸில் 26 சதங்களை எட்டியிருந்தார். ஆனால் ஸ்டீவ் ஸ்மித் 121 இன்னிங்ஸில் தனது 26ஆவது சதத்தை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்பிறகும் ஸ்மித் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார். 

டெஸ்ட் போட்டிகளில் தனது மூன்றாவது இரட்டை சதத்தையும் ஸ்மித் பதிவு செய்தார். இவர் 310 பந்துகளில் 200 ரன்களை கடந்து அசத்தினார். டெஸ்ட் போட்டி வரலாற்றில் ஸ்மித் அடித்துள்ள மூன்று இரட்டை சதங்களும் இங்கிலாந்து அணிக்கு எதிராகவே என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் ஸ்மித் 319 பந்துகளில் 24 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உதவியுடன் 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.