ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சிறந்த பேட்ஸ்மேன் டான் பிராட்மேன். இவரின் இடத்தை எட்டிப் பிடிக்கும் அளவிற்கு தற்போது அசுர வளர்ச்சி அடைந்துள்ளார் ஸ்டீவ் ஸ்மித். இவர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை 2010ஆம் ஆண்டு தொடங்கினார். அப்போது ஸ்மித் ஒரு சுழற்பந்து வீச்சாளராக களமிறங்கினார். இவரை அணியில் தேர்வு செய்ததற்கு ஆஸ்திரேலியாவில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அந்த விமர்சனங்களுக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இவரின் வளர்ச்சி அமைந்தது.
இவர் கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் 7ஆவது அல்லது 8ஆவது வீரராக களமிறங்கினார். அத்துடன் தனது லெக் ஸ்பின் பந்துவீச்சையும் தொடர்ந்து வந்தார். 2010-11ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடருக்கு இவர் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி இழந்தது. ஆஷஸ் தொடருக்கு ஸ்மித் தேர்வு செய்யப்பட்டதற்கு பல விமர்சனங்கள் எழுந்தன. எனவே இந்தத் தொடருடன் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தத் தொடருக்கு பிறகு, ஸ்மித்திற்கு பந்துவீச்சைவிட பேட்டிங் நன்றாக வருகிறது என்று சிலர் கருத்து தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்மித் தனது பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். அப்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிரேக் சாப்பல்,“ஆஸ்திரேலியாவில் சிறந்த பேட்டிங் திறமை படைத்த வீரர்களில் ஸ்மித் ஒருவர்” என புகழ்ந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார். அந்தத் தொடரை ஆஸ்திரேலிய அணி இழந்திருந்தாலும், ஸ்மித் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். எனவே அந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் ஸ்மித் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக மெல்பேர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஸ்மித் சதம் அடித்து ஆஸ்திரேலியா போட்டியை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். மேலும் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை வெல்லவும் முக்கிய காரணமாக இருந்தார்.
இதனைத் தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த போது ஸ்மித் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தத் தொடருக்கு பின் ஸ்மித் கிரிக்கெட் வாழ்க்கையில் சருக்கல்களையே சந்திக்கவில்லை. இவர் அனைத்து நாடுகளிலும் ரன் வேட்டையில் இறங்கினார். பொதுவாக வெளிநாட்டு வீரர்கள் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமப்படுவார்கள். இதற்கு மாறாக ஸ்மித் சழற்பந்து வீச்சாளர்களையும் சிறந்த முறையில் எதிர்கொண்டார்.
இதற்கு 2015 ஆஷஸ் தொடர் மற்றும் 2017 இந்திய சுற்றுப் பயணம் ஒரு சிறந்த சான்றாக அமைந்தது. 2015ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் போது இங்கிலாந்து லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரட்டை சதம் அடித்து ஸ்மித் அசத்தினார். 2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டனாக இவர் அறிவிக்கப்பட்டார்.
கேப்டனாக ஸ்மித் தனது டெஸ்ட் போட்டி பயணத்தில் சிறந்து விளங்கினார். ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் 3659 ரன்கள், 15 சதம் மற்றும் 13 அரைசதங்கள் ஆகியவற்றை 70.36 சராசரியுடன் அடித்துள்ளார். இவ்வாறு சிறப்பாக சென்று கொண்டிருந்த ஸ்மித் கிரிக்கெட் பயணத்தில் மிகவும் மோசமான நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அது இவரின் கிரிக்கெட் வாழ்வை புரட்டி போட்டது.
2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்தது. இந்தத் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுன் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்தியது வீடியோவில் பதிவானது. இதனைத் தொடர்ந்து ஐசிசி ஸ்மித்திற்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதித்தது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவருக்கும் ஒராண்டு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்தது. ஸ்மித் ஆஸ்திரேலிய கேப்டனாக செயல்படுவதற்கு இரண்டு ஆண்டுகள் தடையையும் விதித்தது.
இந்தப் போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலியாவிற்கு திரும்பிய ஸ்டீவ் ஸ்மித் கண்ணீர் மல்க ஒரு பேட்டியை அளித்திருந்தார். அதில், “ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், ஆஸ்திரேலிய மக்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் உங்கள் அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். கேப்டவுன் போட்டியில் நடைபெற்ற தவறுக்கு நானே முழு பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் என்னுடைய தலைமை பண்பை தோல்வி கொள்ள செய்துள்ளது. இதனை மாற்ற என்ன செய்யவேண்டுமோ நான் அதனை செய்வேன்” என மிகுந்த வருத்தத்துடனும் கண்ணீருடனும் தெரிவித்தார்.
இந்தத் தடை காலத்திற்கு பிறகு ஸ்டீவ் ஸ்மித் உலகக் கோப்பை தொடரில் களமிறங்கினார். அப்போது இவர் மைதானத்திலிருந்த ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டார். எனினும் இதனை கருத்தில் கொள்ளாமல் ஸ்மித் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் ஸ்மித் தற்போது விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் இதுவரை 5 இன்னிங்ஸில் விளையாடி உள்ள ஸ்மித் 617 ரன்களை அடித்துள்ளார். இந்தத் தொடரில் ஒரு இரட்டை சதம், 2 சதம் மற்றும் 2 அரைசதங்களை இவர் கடந்துள்ளார்.
இந்த ஆட்டத்தின் மூலம் ஸ்மித் தனது பெயருக்கு ஏற்பட்ட கலங்கத்தை துடைக்க ஆரம்பித்துவிட்டார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் டான் பிராட்மேனிற்கு பிறகு சிறப்பாக பேட்டிங்கில் சாதித்து வருபவர் ஸ்டீவ் ஸ்மித் என்பதற்கு அவரது சாதனைப் பட்டியலே சான்றாக உள்ளது.