விளையாட்டு

ஸ்மித், ஆஸ்திரேலியாவின் விராத் கோலி: லாங்கர்

ஸ்மித், ஆஸ்திரேலியாவின் விராத் கோலி: லாங்கர்

webteam

’முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விராத் கோலி’ அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ் டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன், ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர், வீரர் பேன்கிராப்ட் ஆகியோருக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. ஸ்மித், வார்னருக்கு ஒரு வருட தடையும் பேன்கிராப்டுக்கு ஒன்பது மாதம் தடையும் விதிக்கப்பட்டன. பேன்கிராப்ட்டின் தடை விரைவில் முடிய இருக்கிறது. ஸ்மித், வார்னரின் தடை மார்ச் மாத இறுதியில் முடியும்.


’உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’ என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் ஸ்மித் கூறியிருந்தார். இதற்கிடையே, ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ஸ்மித்தை, ஆஸ்திரேலிய அணியின் விராத் கோலி என்று தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, ‘’ஸ்மித்திடம் பேசினேன். இப்போது அவருக்கு கடினமான நேரம். அவர் அணிக்கு திரும்புவதில் உறுதியோடு இருக்கிறார். அதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதற்காக காத்திருக்க முடியவில்லை. அவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விராத் கோலி. இதுதான் உண்மை. அவர் சிறப்பான வீரர். சிறந்த இளம் கேப்டன்.
டேவிட் வார்னரும் ஸ்மித்தும் அடுத்த வருடம் ஏப்ரலில் நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அணியில் இணைவார் கள் என்று நம்புகிறேன். அவர்களால் ஆஸ்திரேலிய அணிக்கு சிறந்த வெற்றி கிடைத்திருக்கிறது’’ என்றார்.