விளையாட்டு

கோலியை பின்னுக்குத் தள்ளிய ஸ்மித் !

கோலியை பின்னுக்குத் தள்ளிய ஸ்மித் !

jagadeesh

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் நீண்ட காலமாக முதலிடத்தில் இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 2-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். இப்போது அந்தப் பட்டியலின் முதலிடத்துக்கு ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் முன்னேறியுள்ளார்.

வெலிங்டனில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி எளிதாக வென்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தொடர்ந்து 7 போட்டிகளில் வெற்றி பெற்று வீறுநடைபோட்டு வந்த இந்திய அணி, இப்போட்டியில் தோல்வி கண்டுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு இன்னிங்ஸிலும் கோலி 21 ரன்களையே எடுத்தார். இதனால் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் புள்ளிகள் குறைந்து பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்தப் பட்டியலில் இந்திய பேட்ஸ்மேன்கள் ரஹானே, புஜாரா, மயங்க் அகர்வால் ஆகியோர் முறையே 8,9,10-ஆவது இடத்தை பிடித்துள்ளனர்.

இதேபோல பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் சுழற் பந்துவீச்சாளர் அஷ்வின் மட்டுமே 9-ஆவது இடத்தில் உள்ளார். முதல் 10 இடங்களில் இடம்பெற்று இருந்த பும்ரா, முகமது ஷமி ஆகியோர் மோசமான பந்துவீச்சின் காரணமாக இடம்பெறவில்லை. இந்நிலையில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் 29-ஆம் தேதி க்ரைஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது.