ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 240 ரன்கள் எடுத் துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. டி-20 தொடரை இழந்த பாகிஸ்தான் அணி, அடுத்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி, பிரிஸ் பேனில் இன்று காலை தொடங்கியது. இந்த தொடர் உலக சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில், 16 வயதே நிரம்பிய வேகப் பந்துவீச்சாளர் நஸீம் ஷா சேர்க்கப்பட்டார்.
கேப்டன் அசார் அலியும் ஷான் மசூத்தும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களைச் சேகரித்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 75 ரன்கள் சேர்த்தனர். மசூத் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹரிஸ் சோஹைல் ஒரு ரன்னில் வெளியேற, ஆசாத் ஷபிக் நிலைத்து நின்று ஆடினார். பின்னர் வந்த பாபர் ஆசம் ஒரு ரன்னிலும் இப்திகர் அகமது 7 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் முகமது ரிஸ்வான் ஷபிக்குடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடினர். அரை சதம் அடித்த ஷபிக் 76 ரன்களிலும் ரிஸ்வான் 37 ரன்களிலும் வெளியேற அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும் ஹசல்வுட் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இரண்டாம் நாள் ஆட்டம் நாளை நடக்கிறது.