ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று பிற்பகல் 3 மணிக்கு லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இலங்கை அணி வீரர் நுவன் பிரதீபுக்கு காயம் குணமடைந்தால் அவர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம் ஆஸ்திரேலியா அணியில் காயம் காரணமாக நாதன் கோல்டர்நைல் தற்போது அணியில் இல்லை. இவருக்குப் பதிலாக பெஹரன்டாஃப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆரோன் ஃபின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, நடப்புத் தொடரில் விளையாடிய 4 போட்டிகளில் மூன்றில் வெற்றியையும், ஒன்றில் தோல்வியையும் கண்டுள்ளது. கருணரத்னே தலைமையிலான இலங்கை அணி 4 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியையும், ஒரு தோல்வியையும் கண்டுள்ளது.
மேலும் இரண்டு போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இதுவரை 96 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி 60 போட்டிகளிலும், இலங்கை அணி 32 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 4 போட்டிகள் மழை உள்ளிட்ட காரணங்களால் முடிவு காணப்படவில்லை.