விளையாட்டு

அசத்தியது இலங்கை இளம் அணி: கடைசி டி-20 போட்டியிலும் பாக். தோல்வி

அசத்தியது இலங்கை இளம் அணி: கடைசி டி-20 போட்டியிலும் பாக். தோல்வி

webteam

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டி-20 போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இலங்கை கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே, மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வந்தது. முதல் இரண்டு போட்டிகளை வென்று இலங்கை அணி, தொடரை ஏற்கனவே கைப்பற்றிய நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி, லாகூரில் நேற்று நடந்தது.

முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தது. ஒஷாடா பெர்னாண்டோ அபாரமாக ஆடி 48 பந்துகளில் 78 ரன்கள் விளாசினார். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியால், 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் அந்த அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அதிகப்பட்சமாக ஹரிஸ் சோகைல் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை தரப்பில் ஹசரங்கா டி சில்வா 3 விக்கெட் எடுத்தார். அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

அனுபவம் குறைந்த இளம் இலங்கை அணி, டி-20 தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.