காயம் காரணமாக சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இருந்து இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் விலகியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த். உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள இவர், சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்று பட்டம் வென்றால் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் நாக்பூரில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியின்போது காலில் ஏற்பட்ட காயத்தால் சீன ஓபன் பேட்மிண்டனை அவர் தவிர்த்துள்ளார். இதனால் உலகத்தரவரிசையில் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பை அவர் இழந்துள்ளார்.
சீன ஓபனில் ஸ்ரீகாந்த் பங்கேற்காததற்கு காயம் ஒரு காரணம் என்றால் இந்திய பாட்மிண்டம் சம்மேளனத்தின் சரியான திட்டமிடுதல் இல்லாதது முக்கிய காரணம் என விமர்சகர்கள் கூறுகின்றனர். ஸ்ரீகாந்த் தற்போது தான் டென்மார்க் மற்றும் ஃபிரெஞ்ச் ஓபன் டைட்டில்களை வென்றுள்ளார். சீன ஓபனில் அவர் பங்கேற்றிருந்தால் அவர் கண்டிப்பாக இந்த பட்டத்தை வென்றிருக்க கூடும் என்கின்றனர்.
உலக அளவில் முன்னணி போட்டிகள் வரும் நேரத்தில் இந்திய பாட்மிண்டன் சம்மேளனம் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடத்துவதால் வீரர்கள் பாதிக்கப்படுகின்றனர். கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஸ்ரீகாந்த் விளையாடி வருகிறார். முன்னணி போட்டிகளுக்கு வீரர்கள் தயாராவதற்கு குறைந்தது 4 முதல் 6 வார கால பயிற்சி தேவைப்படும். இது போன்ற தேசிய போட்டிகளை ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் வைத்துக்கொள்ளலாம். தேசிய போட்டிகள், வீரர்களை பாதிக்காத வண்ணம் இது இருக்கும் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.