பயிற்சியாளர் இல்லாமல் எனது வெற்றி என்பது சாத்தியமே இல்லையென்று பேட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி இறுதிச் சுற்றில் ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் லாங்கை தோற்கடித்து இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார். முன்னதாக கடந்த வாரம் இந்தோனிசிய ஓபனிலும் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் ஸ்ரீகாந்த். தொடர்ச்சியாக இரண்டு சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற ஸ்ரீகாந்த், வெற்றிக் களிப்பில் தாயகம் திரும்பினார். ஹைதரபாத் விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து பேசிய ஸ்ரீகாந்த், " இந்த வெற்றி உண்மையிலே என்னை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. என்னுடைய பயற்சியாளர் இல்லாமல் இது சாத்தியமே இல்லை. அவருக்க என்னுடைய நன்றியை மனதார தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். ஸ்ரீகாந்த் மற்றும் சிந்து உள்ளிட்ட வீராங்கனைகளுக்கு பயிற்சியாளராக இருப்பது கோபிசந்த் என்பது குறிப்பிடத்தக்கது.