விளையாட்டு

அப்பாடா ஒரு வழியா ஜெயிச்சாச்சு ! வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இலங்கை

அப்பாடா ஒரு வழியா ஜெயிச்சாச்சு ! வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இலங்கை

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியை இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ர கணக்கில் இலங்கை சமன் செய்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பார்படாஸில் பகலிரவு ஆட்டமாக நடந்து வருகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி, முதல் இன்னிங்ஸில் 204 ரன்கள் சேர்த்தது. டோவ்ரிச் 71 ரன்களும் ஹோல்டர் 74 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டையும் குஷன் ரஞ்சிதா 3 விக்கெட்டையும் லக்மல் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர் பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது.

அந்த அணி, 154 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டிக்வெல்லா மட்டும் அதிகப்பட்சமாக 42 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்டன் ஹோல்டர் 4 விக்கெட்டையும் கேப்ரியல் 3 விக்கெட்டையும் ரோச் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர். அடுத்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, வெறும் 93 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் வீரர்களுக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் யாரும் நிலைத்து நிற்கவில்லை. ரோச் மட்டுமே 23 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

இலங்கை தரப்பில் லக்மல், ரஞ்சிதா தலா 3 விக்கெட்டையும் லஹிரு குமரா 2 விக்கெட் டையும் வீழ்த் தினர்.பின்னர் எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியும் திணறியது. தொடக்க ஆட்டக்காரர்கள் மகேலா உடவட்டே ரன் ஏதும் எடுக்காமலும் தனுஷ்கா குணதிலகா 21 ரன்னிலும் தனஞ்செய டி சில்வா 17 ரன்னிலும் ரோஷன் சில்வா ஒரு ரன்னிலும் டிக்வெல்லா 6 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இதையடுத்து 5 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது அந்த அணி. குசால் மெண்டிஸ் 25 ரன்களுடனும் பெரேரா ஒரு ரன்னுடன் களத்தில் உள்ளனர். இலங்கை வெற்றிப் பெற இன்னும் 63 ரன்கள் தேவை. இன்னும் ஐந்து விக்கெட் கையில் உள்ள நிலையில் கடைசி நாளில் களமிறங்கிய இலங்கை அணி மேலும் ஒரு விக்கெட்டை இழந்தது. ஆனால் பொறுமையாக ஆடிய குசால் பெரேராவும், திசாரா பெரேராவும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.