விளையாட்டு

இந்தியா - இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியை நடத்த இலங்கை விருப்பம் !

jagadeesh

அடுத்தாண்டு நடைபெறவுள்ள இந்தியா - இலங்கை இடையிலான டெஸ்ட் தொடரை தங்கள் நாட்டில் நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும் பொது முடக்கம் காரணமாகவும் மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. பின்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என அண்மையில் பிசிசிஐ அறிவித்தது. இதேபோல இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தாண்டு செப்டம்பர் - அக்டோபர் மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருந்தது.

ஆனால் கொரோனா பிரச்னை காரணமாக இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்தாண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அடுத்தாண்டும் இந்தியாவில் போட்டிகள் நடைபெற வாய்ப்பு இல்லாமல் போனால் அந்தத் தொடரை தங்கள் நாட்டில் நடத்திக்கொள்ளுமாறு இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, ஐபிஎல் கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இப்போது மீண்டும் இத்தகைய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. மேலும் பொது முடக்கம் நீக்கப்பட்டு கடந்த வாரம் அங்கு பள்ளிகளும் திறக்கப்பட்டுவிட்டது. ஆகையால் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், அதனை இலங்கையில் நடத்தலாம் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிய வந்துள்ளது. மேலும் இலங்கையில் இந்தியா - இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நடத்த தயாராக இருப்பதாகவும் இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.