விளையாட்டு

ஆறுதல் வெற்றி பெற்ற தென்னாப்ரிக்கா - அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை

rajakannan

இலங்கைக்கு எதிரான போட்டியில் தென்னாப்ரிக்கா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை தொடரில் தென்னாப்ரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி செஸ்டர்-லி-ஸ்டீட் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இலங்கை அணியில் கருணரத்னே முதல் பந்திலே அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

பெராரா, பெர்னாண்டோ தலா 30 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒருவர் கூட 30 ரன்களுக்கு மேல் அடிக்கவில்லை. இறுதியில் இலங்கை அணி 49.3 ஓவரில் 203 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தென்னாப்ரிக்கா அணியில் மோரிஸ், ப்ரிடோரியஸ் தலா மூன்று விக்கெட் சாய்த்தனர். ரபாடா இரண்டு விக்கெட் எடுத்தார்.

204 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்ரிக்க அணியில் டி காக் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர், அம்லா, கேப்டன் டு பிளிசிஸ் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். இவர்களின் விக்கெட்டை எடுக்க இலங்கை முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.

இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்ததோடு, வெற்றி இலக்கையும் ஆட்டமிழக்காமல் எட்டினர். 37.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து தென்னாப்ரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டு பிளசிஸ் 96, ஆம்லா 80 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் அரையிறுதி வாய்ப்பை இலங்கை அணி இழந்துள்ளது. ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட தென்னாப்ரிக்கா அணிக்கு இது ஒரு ஆறுதல் வெற்றிதான்.