விளையாட்டு

டி20 உலகக்கோப்பை: இலங்கையை வீழ்த்திய கத்துக்குட்டி நமீபியா

JustinDurai

கத்துக்குட்டி அணியான நமீபியாவை இலங்கை அணி எளிதாக வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடரின் முதல் போட்டியிலேயே வெற்றியை ருசித்திருக்கிறது நமீபியா.

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. தொடரின் முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை, கத்துக்குட்டி அணியான நமீபியாவை இன்று சந்தித்தது. தகுதிச்சுற்று போட்டியான இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20  ஓவர்களில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. அந்த அணி தரப்பில் பிரைலின்க் 28 பந்துகளில் 44 ரன்னும், ஜே.ஜே.ஸ்மித் அவுட் ஆகாமல் 16 பந்துகளில் 31 ரன்னும் எடுத்தனர்.

இதையடுத்து 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியினர் நமீபியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்து திணறினர். இதனால் 19 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இலங்கை அணி 108 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் தசுன் ஷானக மட்டுமே 23 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார். 7 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி அதிர்ச்சியளித்தனர். இதனால் நமீபியா அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் டேவிட் வைஸ், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ், பென் ஷிகோங்கோ, ஜான் ஃப்ரைலின்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினர்.

கத்துக்குட்டி அணியான நமீபியாவை இலங்கை அணி எளிதாக வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடரின் முதல் போட்டியிலேயே நமீபியா அபாரமான வெற்றியை ருசித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.  ஏற்கனவே நமீபியா அணி 2021 உலகக்கோப்பைத் தொடரில் அயர்லாந்து, நெதர்லாந்தை வீழ்த்தி 'சூப்பர்-12' சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 'டி20 உலகக்கோப்பையை விட பும்ராவின் கிரிக்கெட் கரியர் மிக முக்கியம்' - ரோகித் சர்மா