விளையாட்டு

மீண்டும் பாலியல் புகாரில் இலங்கை கிரிக்கெட் வீரர் - கைது செய்த சிட்னி போலீஸ்!

JustinDurai

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகா பாலியல் புகாரில் சிட்னி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா, டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தார். ஆனால் காயம் காரணமாக தொடரின் இடையே குணதிலகா விலகினார். இவருக்கு பதிலாக இலங்கை அணியில் அஷேன் பண்டாரா சேர்க்கப்பட்டார். காயம் அடைந்தாலும் அவர் இலங்கைக்கு திரும்பாமல் அணியுடனேயே இருந்தார்.

இந்த நிலையில் நேற்று சிட்னியில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டிக்கு பின்னர் இலங்கை அணியின் தனுஷ்கா குணதிலகாவை சிட்னி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  தனுஷ்கா குணதிலகா மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தனுஷ்கா குணதிலகா இல்லாமலேயே இலங்கை அணி சொந்த நாடு திரும்ப விமானம் ஏறியது.

கடந்த 2018ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட்டில் முறைகேடு செய்ததற்காக  தனுஷ்கா குணதிலகா இடைநீக்கம் செய்யப்பட்டார். அப்போதும் இதேபோன்ற ஒரு சம்பவத்தில் குணதிலகா ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.  இலங்கையில் நோர்வே பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில்  தனுஷ்கா குணதிலகாவையும் அவரது நண்பரையும் காவல்துறையினர் விசாரணைக்கு உட்படுத்தினர். எனினும் அவரது நண்பர் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டதுடன், இதற்கும்  தனுஷ்கா குணதிலகாவுக்கும் சம்பந்தமில்லை என்று விசாரணையில் தெரியவந்ததையடுத்து விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

இதையும் படிக்கலாமே: டி20 உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து - ஆஸ்திரேலியா வெளியேற்றம்