விளையாட்டு

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்த இலங்கை! ஒரு நாள் தொடரை வென்று அசத்தல்

ச. முத்துகிருஷ்ணன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரைக் கைப்பற்றியது.

கொழும்புவில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 34 ரன்களில் 3 விக்கெட்களை பறிகொடுத்தது. பின்னர் தனஞ்ஜெயா, அசலன்கா ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். தனஞ்ஜெயா 60 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் முதல் சதத்தைப் பதிவு செய்த அசலென்கா 110 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து இலங்கை அணி 258 ரன்களில் ஆட்டமிழந்தது.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளிக்க, டேவிட் வார்னர் பொறுப்புணர்ந்து நிதானமாக விளையாடினார். மற்ற அனைவரும் சில பந்துகளை மட்டும் எதிர்கொண்டு, அவுட்டாகி பெவிலியனுக்கு ஃபேஷன் ஷோ நடத்த, வார்னர் மட்டும் தனியாளாக போராடினார். 99 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் அவுட்டாகி, “ஒரு ரன்னில்” சதத்தை தவறவிட்டார்.

அடுத்து வந்த பேட்டர்களும் பெரிய அளவுக்கு சோபிக்காததால், 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த இலங்கை அணி 30 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.