விளையாட்டு

59 ரன்களில் சுருட்டப்பட்ட இலங்கை... யு19 உலகக்கோப்பையில் அசத்தும் இந்திய வீராங்கனைகள்!

webteam

மகளிருக்கான யு19 உலகக்கோப்பை தொடரில், சூப்பர் சிக்ஸ் பிரிவில் இந்திய மகளிர் அணி இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

மகளிருக்கான யு19 (under 19) உலகக்கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இலங்கை, அமெரிக்கா, 'பி' பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான், ருவாண்டா, ஜிம்பாப்வே, 'சி' பிரிவில் அயர்லாந்து, இந்தோனேசியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், 'டி' பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றை எட்டும். இதில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவையும், 2வது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தையும், 3வது போட்டியில் ஸ்காட்லாந்தையும் வீழ்த்தி இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன் அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.

இதையடுத்து, அடுத்த சுற்றான சூப்பர் சிக்ஸ் பிரிவில் அண்டை நாடான இலங்கை மகளிர் யு19 அணியை இந்திய அணி சந்தித்தது. இதில், டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியின் பேட்டர்கள், இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமால் சீட்டுக்கட்டுப் போல் சரிந்தனர். அவ்வணியின் கேப்டன் விஷ்மி குனரத்னே அதிகபட்சமாக 25 ரன்களும், அவரைத் தொடர்ந்து உமாயா ரதனாயகே 13 ரன்களும் எடுத்தார்.

இவர்களைத் தவிர மற்ற இலங்கை அணியின் பேட்டர்கள் யாரும் இரட்டை இலக்க ரன்களைத் தொடவில்லை. இதனால் அவ்வணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 59 ரன்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணி தரப்பில் பர்ஷவி சோப்ரா 4 ஓவர்களை வீசி 5 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதில் ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும்.

பின்னர் 60 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், வழக்கம்போல கேப்டன் ஷஃபாலி வர்மா - சுவேதா ஷெராவத் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஷஃபாலி 15 ரன்களில் ஆட்டமிழக்க, ஷெராவத்தும் 13 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து வந்த ரிச்சா கோஷும் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

பின்னர் களமிறங்கிய சௌமியா திவாரி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 15 பந்துகளில் 5 பவுண்டரிகளை விளாசியதுடன் 28 ரன்களைச் சேர்த்து, இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்திய மகளிர் யு19 அணி 7.2 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

- ஜெ.பிரகாஷ்