ஐபில் தொடரில் இன்று நடைபெறவுள்ள ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
ஐபிஎல் 2019 தொடரின் லீக் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் தொடக்கம் முதலே சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் இருந்தது. அஸ்வின் மன்கட் முறையில் ரன் அவுட் செய்த சர்ச்சை முடிவதற்குள், நேற்று நடைபெற்ற மும்பை இண்டீஸ் - பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ‘நோ பாலை’ நடுவர் கவனிக்க தவறியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி ஐதராபாத்தில் இன்று நடைபெறவுள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ராஜஸ்தான் அணியில் மாற்றமில்லை. ஐதராபாத் அணியில் ஷகிப்பிற்கு பதிலாக வில்லியம்சன் களமிறங்குகிறார். தீபக் ஹூடாவுக்கு பதிலாக நதீம் விளையாடுகிறார்.
ஐதராபாத் அணி தன்னுடைய முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. வார்னர் 85 ரன்கள் விளாச அந்த அணி 181 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய கொல்கத்தா அணியில் ரானா 68 ரன்கள் எடுக்க, இறுதி ரஸ்ஸல் 19 பந்தில் 49 ரன்கள் விளாசி ஐதராபாத்தின் வெற்றியை தட்டிச் சென்றார். இந்தப் போட்டியில் ரஷித் கான் மட்டும் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 26 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தன்னுடைய முதல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொண்டது. பஞ்சாப் அணி நிர்ணயித்த 184 ரன்கள் விரட்டி ராஜஸ்தான் அணியில், பட்லர் அதிரடியாக விளையாடி வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இருப்பினும், அஸ்வின் அவரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்து ஆட்டமிழக்க செய்தார். பட்லரின் விக்கெட் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து விக்கெட் விழ ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது.
இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தங்களுடைய இரண்டாவது போட்டியில் விளையாடுகின்றன. இரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளதால், முதல் வெற்றியை பதிவு செய்ய கடும் முயற்சியை மேற்கொள்வார்கள்.