விளையாட்டு

SRH vs KKR : சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது கொல்கத்தா 

EllusamyKarthik

அபுதாபியில் நடைபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.

இதனையடுத்து கொல்கத்தா முதலில் பேட் செய்தது. 

இருபது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை குவித்தது கொல்கத்தா. 

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தியது ஹைதராபாத்.

எல்லோருக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக வில்லியம்சன்னும், பேர்ஸ்டோவும் சன்ரைசர்ஸ் அணியின் ஓப்பனர்களாக களம் இறங்கினர்.

பவர்பிளேயில் விக்கெட்டை இழக்காமல் இருவரும் இணைந்து 58 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

அவர்களது அதிரடி சன்ரைசர்ஸ் அணியின் பக்கமாக ஆட்டத்தை திருப்பி இருந்தது. 

கொல்கத்தாவின் ஃபெர்க்யூஸன் வில்லியம்சன்னை ஷார்ட் லென்த் டெலிவரி வீசி காலி செய்தார்.

தொடர்ந்து களம் இறங்கிய பிரியம் கார்க், மணீஷ் பாண்டே, விஜய் ஷங்கர் மாதிரியான பேட்ஸ்மேன்கள் பெரிய இன்னிங்க்ஸை விலையாட தவறினர்.

ஹைதரபாத் கேப்டன் வார்னர் மட்டும் களத்தில் ஒற்றையாளாக போராடினார். நிதானமாக விளையாடிய அவர் 33 பந்துகளில் 47 ரன்களை குவித்தார்.  

ரஸ்ஸல் வீசிய கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 17 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டம் சமனில் முடிந்தது. 

இரு அணிகளும் சூப்பர் ஓவரில் விளையாடின.

முதலில் பேட் செய்த ஹைதரபாத் அணி மூன்று பந்துகளில் இரண்டு ரன்களை மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது. கொல்கத்தாவிற்காக சூப்பர் ஓவரை ஃபெர்க்யூஸன் வீசினார்.

இந்த ஆட்டத்தில் மொத்தமாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஃபெர்க்யூஸன்.

அடுத்ததாக பேட் செய்த கொல்கத்தா மூன்று ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.