துபாயில் நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
இதனையடுத்து ஹைதராபாத் அணி முதலில் பேட் செய்து இருபது ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களை குவித்தது.
இமாலய இலக்கான 220 ரன்களை டெல்லி விரட்டிய போது ஓப்பனரும், ஃபார்மில் உள்ள பேட்ஸ்மேனுமான தவான் டக் அவுட்டாகி வெளியேறினார்.
ஹைதராபாத் அணியின் சந்தீப் ஷர்மா வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் தவான் விக்கெட்டை இழந்தார்.
அவுட்சைட் தி ஆப் ஸ்டெம்ப் திசையில் ஃபுள் லென்த் டெலிவரியாக வந்த அந்த பந்தை லெக் சைடில் அடிக்க முயன்றார் தவான். இருப்பினும் பந்து பேட்டில் பட்டு மிட் ஆஃப் திசையில் நின்று கொண்டிருந்த வார்னரிடம் கேட்ச் ஆனது.
தவான் வெளியேறியது டெல்லிக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களில் அடுத்தடுத்து சதம் கடந்தவர் அவர். தவான் ஆட்டமிழந்த பிறகு ஸ்டொய்னிஸ் களமிறங்கினார். வழக்கமாக ஸ்ரேயாஸ் ஐயர் தான் மூன்றாவது வீரராக இறங்குவார். அதிரடியாக இறக்கப்பட்ட ஸ்டொய்னிஸ் வந்த வேகத்தில் ஒரு பவுண்டரி அடித்தார். அவரும் 5 ரன்களில் நதீம் பந்துவீச்சில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினார். 14 ரன்களுக்குள் டெல்லி அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
ஸ்டொய்னிஸ் ஆட்டமிழந்த பிறகும் ஸ்ரேயாஸ் ஐயர் இறங்கவில்லை. ஹெட்மயர் இறக்கிவிடப்பட்டுள்ளார். இந்தப் போட்டியில் தோல்வியுற்றால் அது டெல்லிக்கு மேலும் நெருக்கடியை தரும். குறைந்தபட்ச 175 ரன்களுக்கு மேலாவது அடித்தால்தான் ரன் ரேட் கூடுதலாக கிடைக்கும்.