விளையாட்டு

நித்திஷ் ராணா - ராகுல் திரிபாதி அதிரடி: ஹைதராபாத் வெற்றி பெற 188 ரன்கள் கொல்கத்தா இலக்கு!

EllusamyKarthik

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனின் மூன்றாவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்துள்ளது. 

அந்த அணிக்காக நித்திஷ் ராணா மற்றும் ராகுல் திரிபாதி அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். நித்திஷ் ராணா 80 ரன்களும், ராகுல் 53 ரன்களும் குவித்தனர். ஹைதராபாத் அணிக்காக ரஷீத் கான் 4 ஓவர்கள் வீசி 24 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார். அதேபோல முகமது நபியும் தனது கடைசி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இருப்பினும் ஹாட்ரிக் வாய்ப்பை இழந்தார். 

93 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்த ராகுல் மற்றும் நித்திஷ் ராணா இணையை பிரித்தார் நடராஜன். 

15 ஓவர்கள் முடிவில் 145 ரன்களுக்கு ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த கொல்கத்தா அணி அதற்கடுத்த 30 பந்துகளில் வெறும் 42 ரன்களை மட்டுமே குவித்து 5 விக்கெட்டுகளையும் இழந்தது. டெத் ஓவரில் ஹைதராபாத் அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்து வீசி இருந்தனர். புவனேஷ்வர் கடைசி பந்தில் ஒரு விக்கெட் வீழ்த்தினார். 

அதனால் ஹைதராபாத் அணி 188 ரன்கள் என்ற இலக்கை விரட்டி வருகிறது.