விளையாட்டு

ஒரு இன்னிங்ஸில் 5 கேட்ச்கள் பிடித்த முதல் வீரர் - ஐதராபாத் ஆல்ரவுண்டர் நபி புதிய சாதனை

JustinDurai
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் அதிக கேட்ச்களைப் பிடித்தவர் என்ற சாதனையை ஐதராபாத் அணியின் முகமது நபி படைத்துள்ளார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 5 கேட்ச்களைப் பிடித்ததன் மூலம் நபி இச்சாதனையை வசமாக்கினார். போட்டியில் மற்ற சில வீரர்கள் மோசமான ஃபீல்டிங்கை வெளிப்படுத்திய சூழலில் நபி சிறப்பாக செயல்பட்டு 5 கேட்ச்களையும் தவற விடமால் லாவகமாக பிடித்து அசத்தினார்.
அபுதாபியில் நடைபெற்ற இந்தப் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. பிளே ஆஃப்க்குச் செல்ல 171 ரன்கள் வித்தியாசத்தில் வென்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடியில் இருந்த மும்பை அணி, முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களில் ஒருவரான இஷான் கிஷன் 32 பந்துகளில் 84 ரன்களும், மத்திய கள வீரர் சூர்யக்குமார் 40 பந்துகளில் 82 ரன்களும் விளாச மும்பை அணி 20 ஓவர்களில் 235 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது. மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணிக்கு ஜேசன் ராய், அபிஷேக் ஜோடி அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. கேப்டன் மணிஷ் பாண்டேவும் பொறுப்புடன் விளையாடி 69 ரன்களைச் சேர்த்தார். இருப்பினும் அந்த அணியால் 20 ஓவர்களில் 193 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.