“காயத்தினால் விளையாட களம் இறங்க முடியாமல் தவிக்கும் நடராஜன்!” அப்டேட் கொடுத்த வார்னர்
இந்திய கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளரும், தமிழகத்தை சேர்ந்தவருமான தங்கராசு நடராஜன் நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர் அதற்கடுத்த இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. மும்பை போட்டியின் போது அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளதாக அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான் கால் மூட்டில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக பஞ்சாப் அணியுடனான போட்டிக்கு பிறகு சொல்லி இருந்தார் ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர்.
“நடராஜனுக்கு மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய பயோ பபுள் சூழலில் அவரது காயத்தை ஸ்கேன் செய்ய வேண்டும் என்றால் மீண்டும் அவர் அணிக்கு திரும்ப 7 நாட்கள் வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது.
இப்போதைக்கு அவரை பிஸியோ நிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர்” என தெரிவித்துள்ளார் வார்னர்.
கடந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் நடராஜன். அதன் மூலம் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார் நடராஜன் எனபதும் குறிப்பிடத்தக்கது.