விளையாட்டு

"ஸ்ரீசாந்த் மீண்டும் கேரளாவுக்காக விளையாட வேண்டும்" - டினு யோகனன் விருப்பம் !

"ஸ்ரீசாந்த் மீண்டும் கேரளாவுக்காக விளையாட வேண்டும்" - டினு யோகனன் விருப்பம் !

jagadeesh

ஸ்ரீசாந்த் கேரள ரஞ்சி அணிக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்று அம்மாநில கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளருமான டினு யோகனன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்திற்கு கிரிக்கெட் விளையாட விதிக்கப்பட்டிருந்த தடை, இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து அவர் மீண்டும் மாநில கிரிக்கெட் அணியில் இடம்பெறுவாரா என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் கேரள மாநிலக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டினு யோகனன், ஸ்ரீசாந்த் எதிர்காலம் குறித்துப் பேட்டியளித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் கொடுத்துள்ள பேட்டியில் " ரஞ்சி டிராஃபியில் ஸ்ரீசாந்தை அணியில் தேர்ந்தெடுக்க நிச்சயமாகப் பரிந்துரை செய்யப்படும். அவர் கேரளாவுக்காக மீண்டும் விளையாட வேண்டும் என்று விரும்புகிறோம். மொத்த கேரள மாநிலமே அதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. அவரின் திறமை அனைவரும் அறிந்ததே, இப்போதைக்கு உடற்தகுதி மட்டுமே முக்கியம்" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் " செப்டம்பர் மாதம் ஸ்ரீசாந்த் தடைக் காலம் முடிவுக்கு வருகிறது. அதற்குள் அவர் தயாராக வாய்ப்பிருக்கிறது. அவரின் பந்துவீச்சிலும் உடற்தகுதியிலும் அதிக கவனம் செலுத்து வருகிறார். அவரின் திறன் மற்றும் உடற்தகுதியை மதிப்பிட வேண்டிய தேவை உள்ளது" எனக் கூறியுள்ளார்.

இந்தியாவுக்காக 27 டெஸ்ட் போட்டிகளில் 87 விக்கெட்டுகளையும் 53 ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் ஸ்ரீசாந்த். 2007 உலகக்கோப்பை டி20 தொடரில் இவரது பங்களிப்பு பெரிதும் பேசப்பட்டது. ஆனால் 2013 ஐபிஎல் தொடரில் ஸ்பாட் பிக்சிங்கில் சிக்கி 7 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டார் ஸ்ரீசாந்த். இப்போது அவருக்கு 37 வயதாவது குறிப்பிடத்தக்கது.