ஆன்லைன் ரம்மி file image
விளையாட்டு

ஆன்லைன் கேம்ஸ்-க்கு தடை.. இது விளையாட்டுத்துறைக்கு வரமா... சாபமா?

தமிழ்நாடு பிரீமியர் லீக், கர்நாடகா பிரீமியர் லீக் போன்ற மாநில அளவிலான டி20 தொடர்களுக்கான ஸ்பான்சர்ஷிப் இந்த ஆன்லைன் நிறுவனங்கள் மூலமே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது..

PT WEB

பணம் கட்டும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அரசுக்கும், விளையாட்டு அமைப்புகளுக்கும் 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் சங்கங்களை பொருத்தவரை, இந்தியா மட்டுமல்லாது பன்னாடுகளிலும் ஆன்லைன் விளையாட்டுகள் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாக இருந்து வந்தன. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கிய ஸ்பான்சர்களாக இருந்தன. இப்போது இந்த நிறுவனங்கள் விலகியுள்ளதால், பிசிசிஐ போன்ற பெரிய அமைப்புகளுக்குக் கூட புதிய ஸ்பான்சர்களைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆன்லைன் மோசடி

விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி, ஹர்திக் பாண்டியா போன்ற பிரபல வீரர்கள் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் விளம்பரத் தூதர்களாக இருந்து, இதன் மூலம் பெரும் வருவாய் ஈட்டி வந்தனர். தற்போது இந்த வருவாய் தடைபட்டதால், சிறிய வீரர்கள் தங்கள் வருமானத்தில் 40 சதவீதம் வரை இழந்துள்ளனர்.

சில ஐபிஎல் வீரர்கள் தங்கள் விளம்பர வருவாயில் பெரும்பகுதியை இழந்துள்ளனர். தமிழ்நாடு பிரீமியர் லீக், கர்நாடகா பிரீமியர் லீக் போன்ற மாநில அளவிலான டி20 தொடர்களுக்கான ஸ்பான்சர்ஷிப் இந்த ஆன்லைன் நிறுவனங்கள் மூலமே வந்தது. இப்போது அவை தடைபட்டதால், இந்தத் தொடர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

ஆன்லைன் கேம்

கிரிக்கெட் அல்லாது பிற விளையாட்டுப் போட்டிகளுக்கும் இந்த நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்துள்ளதால், மற்ற விளையாட்டுத் துறைகளுக்கும் இதன் தாக்கம் இருக்கும். புதிய சட்டம், ஒருபுறம் சமூகப் பாதிப்புகளைக் குறைக்க உதவும் என்று கூறப்பட்டாலும், மறுபுறம் விளையாட்டுத் துறையின் பொருளாதாரத்தில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட சில நாடுகளில் இந்த ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் தான் அந்த நாடுகளில் கிரிக்கெட்டை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. வெற்றிடத்தை நிரப்ப புதிய ஸ்பான்சர்களை ஈர்க்க வேண்டியது விளையாட்டு அமைப்புகளுக்கு பெரிய சவாலாக உருவாகியிருக்கிறது.