விளையாட்டு

கோலியின் சாதனையை முறியடித்தார் ஆம்லா - ஆனால்?

கோலியின் சாதனையை முறியடித்தார் ஆம்லா - ஆனால்?

rajakannan

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென்னாப்ரிக்கா வீரர் ஹசிம் ஆம்லா தனது 27வது சதத்தை நிறைவு செய்துள்ளார். 

பாகிஸ்தான் - தென்னாப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி போர்ட் எலிசபெத் நகரில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது. ஹசிம் ஆம்லா 120 பந்தில் 108 ரன் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். துசென் 93(101), ஹெண்ட்ரிக்ஸ் 45(67) ரன் எடுத்தனர்.

இது ஹசிம் ஆம்லாவுக்கு 27வது சதமாகும். இதன் மூலம் வேகமாக 27வது சதம் அடித்த வீரர் என்ற பெருமையை விராட் கோலியிடம் இருந்து ஆம்லா தட்டிச் சென்றுள்ளார். விராட் கோலி 169 இன்னிங்சில் 27வது சதத்தை பூர்த்தி செய்திருந்தார். ஆனால், அதற்குள் இரண்டு இன்னிங்ஸ் குறைவாக 167இல் ஆம்லா 27 சதங்கள் அடித்துள்ளார். 

இருப்பினும் ஆம்லா இந்த சாதனை சதம் தென்னாப்ரிக்காவுக்கு சாதகமாக அமையவில்லை. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி 49.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் இமாம் உல் ஹாக் 86, முகமது ஹபீஸ் 71, பாபர் அஜம் 49 ரன்கள் எடுத்தனர். 

ஒருபுறம் ஹசிம் ஆம்லா அடித்த சாதனை சதத்திற்காக அவரை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டியுள்ளனர். ஆனால், சிலரோ, ஆம்லாவின் மெதுவாக ஆட்டத்திற்காக கிண்டல் செய்தும் விமர்சித்துள்ளார்.

ஆம்லா கடைசி 10 ஓவரில் 26 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். 300 ரன்களை எட்ட வேண்டிய நிலையில் ஆம்லாவின் நிதானமான ஆட்டத்தால் 30 ரன்களுக்கு மேல் குறைவாக எடுக்கப்பட்டது பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்துவிட்டதாகவும் சிலர் கூறியுள்ளனர்.