விளையாட்டு

டி20 மகளிர் உலகக்கோப்பை... இங்கிலாந்துக்கு அதிக இலக்கை நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா!

webteam

இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் 8வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் 10 அணிகள் கலந்துகொண்டன. லீக் சுற்றில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் 'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா உட்பட்ட அணிகளும், 'பி' பிரிவில் இங்கிலாந்து, இந்தியா ஆகிய அணிகளும் அரைஇறுதிக்கு முன்னேறின. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டியில் கடுமையான இலக்கை நோக்கி இறுதிவரை போராடிய இந்திய மகளிர் அணி, 5 ரன்களில் வெற்றியைத் தவறவிட்டது. இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில், இரண்டாவது அரையிறுதியில் இன்று தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்க அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, அவ்வணியில் களமிறங்கிய தொடக்க பேட்டர்கள் வால்வார்டிட் மற்றும் பிரிட்ஸ் ஆகியோர் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். வால்வார்டிட் 44 பந்துகளில் 53 ரன்கள் எடுக்க, மறுமுனையில் பிரிட்ஸ் 55 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். பின்னர் களமிறங்கிய பேட்டர்களில் காப்-ஐ தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால் அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த காப், 27 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி தரப்பில், சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.