தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் நெகடிவ் என வந்ததுள்ளதால் அந்த அணியினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து முடிந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இதன் முதல் ஆட்டம் நேற்று நடைபெறுவதாக இருந்தது.
இதனிடையே, கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனைகளின் முடிவில் தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து டாஸ் போடுவதற்கு முன்பே ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதனால், தென்னாப்ரிக்க அணியினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். போட்டி நாளைக்கு (டிச.6) ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு இன்று மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியானது. இதனையடுத்து நாளை ஒருநாள் தொடர் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், நாளை மறுநாள் (டிச.7) இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறும். மூன்றாவது ஒருநாள் போட்டி டிசம்பர் 9 ஆம் தேதி நடைபெறும்.