கிரிக்கெட் என்பது ஜெண்டில்மேன் கேம் என்று சொல்வார்கள். களத்தில் எதிரணி வீரர்கள் காயம்பட்டால் ஓடி வந்து உதவுவது, நல்ல ரன்கள் அடித்தால், விக்கெட்டுகள் வீழ்த்தினால் பாராட்டு என அழகான விஷயங்கள் களத்தில் நடைபெறுவது வழக்கம்தான். ஆனால், தற்போது தென்னாப்ரிக்க வீரர் செய்துள்ள செயல் ‘அந்த மனசு இருக்கே’ பலரது புருவத்தையும் உயர்த்த வைத்து வியப்படைய செய்துள்ளது. ஜிம்பாப்வே - தென்னாப்ரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்..
ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் 328 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்ரிக்க அணி அபார வெற்றி பெற்ற நிலையில் தற்போது இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நடைபெற்று வருகிறது. ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் தென்னாப்ரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாளிலே தன்னுடைய அதிரடியான ஆட்டத்தால் கேப்டன் வியான் முல்டர் இரட்டை சதம் விளாசினார். முல்டர் 264 ரன்களுடன் முதல் நாள் முடிவில் களத்தில் இருந்தார். இதனையடுத்து இரண்டாவது நாளான நேற்றும் தன்னுடைய அதிரடியை தொடர்ந்தார்.
297 பந்துகளிலேயே அவர் 300 ரன்களை எட்டினார். அதனை தொடர்ந்து 324 பந்துகளில் 350 ரன்களை கடந்தார். இப்படியிருக்க எப்படி முல்டர் 400 ரன்களை கடந்து உலக சாதனை படைப்பார் என்றே பலரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இரண்டாம் நாளில் முதல் செஷன் வரைதான் முடிந்திருந்தது. இன்னும் மூன்றரை நாட்களுக்கு மேல் மீதம் உள்ளது. ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக 5 விக்கெட் இழப்பிற்கு 626 ரன்கள் எடுத்திருந்த போது, அதாவது முல்டர் 367 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளர் செய்வதாக தென்னாப்ரிக்கா அறிவித்தது. அதாவது அறிவித்ததே கேப்டன் ஆன முல்டர் தான்.
இன்னும் 33 ரன்கள் எடுத்திருந்தால் அவர் உலக சாதனை படைத்திருந்தார். அதற்கான எல்லா வாய்ப்புமே இருந்துள்ளது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அவர் இந்த முடிவை அறிவித்தார். இது ஒரு முட்டாள்த்தனமான முடிவு. இந்த முடிவை ஏன் எடுக்க வேண்டும், அணியின் வெற்றியை எந்தவிதத்திலும் இது பாதிக்காதே என்று பலரும் ஆதங்கப்பட்டனர்.
இதுதொடர்பாக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஸ்டெயின் கூறுகையில், “ஜிம்பாப்வேவுக்கு எதிரான 2வது டெஸ்டில், ஒரு நாள் ஆட்டத்தை மீதம் வைத்துகூட வெற்றி பெறும் நிலையில்தான் தென்னாப்பிரிக்கா இருந்தது; இன்று மதிய உணவுக்குப் பிறகு டிக்ளர் செய்யாமல், சில ஓவர்கள் பேட்டிங் செய்திருந்தால் கூட அவர்களுக்கான வெற்றியில் எந்த பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. வியான் முல்டரின் இன்றைய ஆட்டம் 400 ரன்கள் அடிக்க தகுதியானது” என்று வருத்தத்துடன் கூறியிருந்தார்.
இதேபோல் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது குறித்து கேப்டன் முல்டர் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கொடுத்த விளக்கம் எல்லோரும் மனதையும் நெகிழ வைத்துள்ளது.
இதுதொடர்பாக, "முதல் விஷயம், நாங்கள் போதுமான அளவு ரன் காடுத்துவிட்டோம்; பந்துவீச வேண்டிய நேரத்தில் இருந்தோம். அடுத்த விஷயம், பிரையன் லாரா ஒரு லெஜண்ட். அதை நாம் மறுக்கவே முடியாது. மட்டுமன்றி 'இங்கிலாந்து' அணியை எதிர்த்து அவர் 400 ரன்கள் எடுத்தார். வரலாற்றில் பொறிக்கப்பட்ட அந்த சாதனை, மிகவும் சிறப்பு வாய்ந்தது.
வருங்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை, பிரையன் லாரா படைத்த அந்த சாதனை, அப்படியே இருப்பதுதான் சரி.
ஒருவேளை மீண்டுமொரு முறை எனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்தாலும் நான் இந்த முடிவையேதான் எடுப்பேன்" என்று கேப்டன் வியான் முல்டர் கூறியுள்ளார். அவருடைய இந்த விளக்கம் உண்மையில் பலரையும் ஆச்சர்யமடைய வைத்துள்ளது.
இரண்டாம் நாளில் தன்னுடைய முதல் இன்னிங்ஸை விளையாடிய ஜிம்பாப்வே அணி 170 ரன்களில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது. பின்னர் தொடர்ந்து விளையாடி ஜிம்பாப்வே இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் எடுத்துள்ளது.
2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் தான் பிரையன் லாரா 400 ரன்கள் குவித்து சாதனை படைத்திருந்தார். 582 பந்துகளை சந்தித்த லாரா 4 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகளுடன் 400 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மொத்தம் 778 நிமிடங்கள் களத்தில் நின்று இந்த சாதனையை படைத்திருந்தார். ஆனால் அந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெறவில்லை. போட்டி டிரா தான் ஆனது.
முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 751 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, பின்னர் தன்னுடைய முதல் இன்னிங்ஸை விளையாடி இங்கிலாந்து 285 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ ஆன் ஆனது. பின்னர் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி 5 ஆம் நாள் வரை தாக்குபிடித்து போட்டியை டிரா செய்தது இங்கிலாந்து.