விளையாட்டு

"அவர் களமிறங்க 2 ஆண்டு கூட ஆகலாம்" - அதிர்ச்சிக்கிடையே ரசிகருக்காக ரிஷப் பண்ட் செய்த செயல்

சங்கீதா

விபத்தில் படுகாயமடைந்து தற்போது ஓய்வில் இருக்கும் ரிஷப் பண்ட், மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப இன்னும் 2 ஆண்டுகள் கூட ஆகலாம் என பிசிசிஐ-யின் முன்னாள் தலைவரும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இயக்குநருமான சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதற்கிடையே 6 வயது சிறுவனுக்காக, ரிஷப் பண்ட் செய்த செயல் அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி தனது தாயாருக்கு சர்ப்ரைஸ் தருவதற்காக டெல்லி - டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை சென்றுக்கொண்டிருந்தபோது, ரிஷப் பண்ட் ஓட்டிச் சென்ற கார் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவரது கார் தீப்பற்றிய நிலையில், காருக்குள் படுகாயங்களுடன் கிடந்த ரிஷப் பண்ட்டை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பிறகு அறுவை சிகிச்சை முடிந்து, தற்போது ஓய்வில் இருந்து வரும் ரிஷப் பண்ட், மீண்டும் கிரிக்கெட் விளையாட முழு உடற் தகுதிப்பெற முயன்று வருகிறார்.

இந்நிலையில், ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இயக்குநருமான சௌரவ் கங்குலி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “நான் பண்டிடம் ஒன்றிரண்டு முறை பேசினேன். காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளால் தற்போது கடினமான காலகட்டத்தை கடந்து வருகிறார் அவர். விரைவில் அவர் குணமடைய வாழ்த்துகிறேன். இந்திய அணிக்கு அவர் மீண்டும் திரும்ப, ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடங்களோ கூட ஆகலாம். ஐபிஎல் போட்டிகள் துவங்க இன்னும் ஒரு மாத காலம் இருப்பதால், அவருக்கு மாற்று வீரரை விரைவில் தேர்வு செய்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

25 வயதான ரிஷப் பண்ட் காயம் காரணமாக வரும் மார்ச் 31-ம் தேதி துவங்கவுள்ள 16-வது சீசன் ஐபிஎல் போட்டி மற்றும் இந்திய அணியின் முக்கியமான போட்டிகளை தவறவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஜூன் மாதம் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி (புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் பிடித்தால்) மற்றும் அக்டோபர் - நவம்பரில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரையும் இழக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், தற்போது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக விக்கெட் கீப்பரும் பேட்டருமான ஸ்ரீகர் பிரசாத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிகளில் இஷான் கிஷன் மற்றும் கே.எல். ராகுல், ரிஷப் பண்ட்டிற்கு பதிலாக விக்கெட் கீப்பிங் செய்து வருகின்றனர். அத்துடன் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட்டிற்குப் பதில், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நியமிக்கப்படலாம் என பேசப்பட்டு வருகிறது.

கடினமான சூழ்நிலைக்கு இடையே, 6 வயது ரசிகனின் பிறந்தநாளுக்கு ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்து, சிறுவனின் தந்தை ஆசையை நிறைவேற்றியுள்ளார் ரிஷப் பண்ட். சிறுவனின் தந்தை “எனது மகன் அயன், உங்களின் பரம ரசிகர். இடதுகை பேட்ஸ்மேனான அவன், உங்களைப் போலவே சிறந்த கிரிக்கெட் வீரராக ஆக விரும்புகிறார். நீங்கள் குணமடைய வேண்டி கடந்த டிசம்பர் 30-ம் தேதி முதல் பிரார்த்தனை செய்து வருகிறார். இன்று அவனுக்கு 6-வது பிறந்தநாள், அவனுடைய பிறந்த நாளுக்கு உங்களலால் வாழ்த்த முடியுமா?” என்று ட்விட்டரில் கேட்டிருந்தார். மேலும், தனது மகன் வீட்டில் கிரிக்கெட் விளையாடும் வீடியோவையும் அவர் பகிர்ந்திருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள ரிஷப் பண்ட், “பிறந்த நாள் வாழ்த்துகள் அயன். இந்த வருடம் உனக்கு சிறப்பானதாக அமையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.