விளையாட்டு

பயிற்சியாளரின் செயல்பாடுகளை கோலி புரிந்துகொள்ள வேண்டும்: கங்குலி

பயிற்சியாளரின் செயல்பாடுகளை கோலி புரிந்துகொள்ள வேண்டும்: கங்குலி

webteam

பயிற்சியாளர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி புரிந்துகொள்ள வேண்டும் என்று பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழு உறுப்பினர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் 5 பேரைத் தேர்வு செய்து சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு மும்பையில் இன்று நேர்காணலை நடத்தியது. இருப்பினும் பயிற்சியாளரை அந்த குழு இறுதி செய்யவில்லை. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கங்குலி, பயிற்சியாளர் தேர்வு குறித்து கேப்டன் விராத் கோலியிடம் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பயிற்சியாளர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை விராத் கோலி புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறிய கங்குலி, பயிற்சியாளர் தேர்வில் தலையிடாமல் இருந்ததற்காக கோலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். இந்திய கிரிக்கெட் வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் வகையில் புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். கேப்டன் விராத் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலேயே பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே விலகியதாக தகவல்கள் வெளியானநிலையில், கங்குலி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.