இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) தலைவராக நியமிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரிய சீர்திருத்தம் குறித்து லோதா குழு அளித்த பரிந்துரையில் சில மாறுதல்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதில் ஒன்றாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவியில் நீடிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த சலுகை கிடைத்தபோதும் தற்போதைய தற்காலிக தலைவர் சி.கே.கண்ணா, தற்காலிக செயலாளர் அமிதாப் சவுத்ரி ஆகியோரால் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது.
இதே போல, ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா, பிசிசிஐ-ன் முன்னாள் தலைவர் அனுராக் தாகூர் ஆகியோர் 9 வருடங்களாக பதவியில் இருப்பதால் தேர்தலில் போட்டியிடும் தகுதி இல்லை.
இதனால் லோதா குழு நியமித்த விதிகளுக்கு பொருந்தமானவராக கங்குலி இருப்பதாகவும் 4 ஆண்டுகள் ஏதேனும் மாநில கிரிக்கெட் வாரிய தலைவராக இருக்க வேண்டும் என்ற விதிக்கு அவர் பொருந்துவதாகவும் இந்திய கிரிக்கெட் தொழில்நுட்ப பிரிவு, கிரிக்கெட் ஆலோசகர் குழு என பலவற்றில் இடம்பிடித்துள்ளதாலும் அவர் தலைவராகலாம் என்று கூறப்படுகிறது.