விளையாட்டு

நான் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட போது சிலர் என்னை திட்டி தீர்த்தார்கள் - வருண் சக்கரவர்த்தி

EllusamyKarthik

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, உலக மனநல தினமான இன்று தன்னை மனதளவில் மிகவும் பாதித்த தருணம் குறித்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோ கொல்கத்தா அணியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. 

நடப்பு ஐபிஎல் சீசனின் முற்பாதி தொடர் இந்தியாவில் நடைபெற்றது. அப்போது வருண் உட்பட வீரர்கள் சிலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். அதனால் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 

“எனக்கு அந்த நாள் நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. அன்று மருத்துவர் ஸ்ரீகாந்த் என்னை தொடர்பு கொண்டிருந்தார். போனில் துரதிர்ஷ்டவசமாக எனக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக சொன்னார். அதையறிந்து நான் உடைந்து போனேன். அதே நேரத்தில் அது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என நான் எண்ணவில்லை. மின்னஞ்சல் மூலமாகவும், இன்ஸ்டா மெசேஜிலும் நிறைய பேர் என்னை தொடர்பு கொண்டிருந்தனர். நான் இருப்பதை விட இல்லாமல் போயிருக்கலாம் என சிலர் என்னை திட்டி தீர்த்தனர்” என வருண் சொல்லியுள்ளார். 

“சமூக வலைத்தளங்கள் மிகவும் கனிவானதாக இருக்க வேண்டும் என நான் சில நேரங்களில் எண்ணுவது உண்டு. அதற்கு இதுவும் ஒரு காரணம். அவர்களது கருத்துகள் எந்த அளவுக்கு தாக்கம் ஏற்படுத்தும் என அவர்களுக்கு தெரியாது. அதை படிப்பவர்களுக்கு அது ரொம்பவே பாதிக்கும்” என தினேஷ் கார்த்திக் தனது கருத்தை இது குறித்து தெரிவித்துள்ளார். 

மேலும் அபிஷேக் நாயரும் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.