பெங்களூரு டெஸ்ட் போட்டியில் டிஆர்எஸ் சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், மன்னிப்புக் கோரினார்.
இந்திய அணி நிர்ணயித்த 188 ரன்கள் இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணி, 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. ஆஸ்திரேலிய அணியின் இராண்டாவது இன்னிங்ஸின் போது உமேஷ் யாதவ் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்த ஸ்மித், டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்த எண்ணினார். ஆனால், அதற்காக பெவிலியனை நோக்கி ஆஸ்திரேலிய வீரர்களிடம் ஸ்மித் ஆலோசனை கேட்டதை அடுத்து, அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஐசிசி விதிமுறைப்படி, டிஆர்எஸ் எனப்படும் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறையைப் பயன்படுத்த களத்தில் இருப்பவர்களைத் தவிர்த்து மற்றவர்களிடம் ஆலோசனைகள் கேட்கக் கூடாது. இந்த நிலையில் ஸ்மித்தின் செயல், சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து அவர் மன்னிப்புக் கோரினார்.