விளையாட்டு

ஸ்மிர்தி மந்தனா அசத்தல் சதம்... மகளிர் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு 2ஆவது வெற்றி

webteam

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 
டாண்டன் கவுண்டி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய வீராங்கனைகளின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹெய்லே மேத்யூஸ் 43 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் பூனம் யாதவ், தீப்தி ஷர்மா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, பூனம் ராவத் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்து தடுமாறியது. இதையடுத்து ஸ்மிர்தி மந்தனாவுடன் கைகோர்ந்த கேப்டன் மிதாலி ராஜ், அணியை சரிவிலிருந்து மீட்டார். 3ஆவது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்ந்திருந்த நிலையில், 46 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் மிதாலி ராஜ் ஆட்டமிழந்தார். ஸ்மிர்தி மந்தனா சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 106 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்த இலக்கை இந்திய அணி 42.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்திய அணி எட்டியது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கேப்டன் ஸ்டெஃபானி டெய்லர் மற்றும் ஹெய்லே மேத்யூஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.