விளையாட்டு

கொரோனா பிடியில் இலங்கை அணி வீரர்கள் - மேலும் ஒரு வீரருக்கு தொற்று உறுதி

JustinDurai

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் பங்கேற்றுள்ள இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 364 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்திருந்தது. பதும் நிசங்கா 6, கேப்டன் கருணரத்னே 86 ரன்னில் ஆட்டமிழந்தனர். குசால் 84, மேத்யூஸ் 6 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். குசால் 85, மேத்யூஸ் 52, கமிந்து மெண்டிஸ் 61, டிக்வெல்லா 5 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, இலங்கை 3ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 431 ரன் குவித்துள்ளது. சண்டிமால் 118 ரன், ரமேஷ் மெண்டிஸ் 7 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கைவசம் 4 விக்கெட் இருக்க, இலங்கை 67 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

இந்த நிலையில் 2-வது டெஸ்டில் விளையாடிய இலங்கை அணி வீரர் பதும் நிசங்கா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 2-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாளில் பதும் நிசங்காவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு பதிலாக ஓஷத பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பெர்னாண்டோ ஏற்கனவே முதல் டெஸ்டின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ்க்கு பதிலாக களமிறக்கப்பட்டவர் ஆவார்.

ஏற்கனவே முதலாவது டெஸ்டின்போது இலங்கை அணியின் தனஞ்ஜெயா டி சில்வா, அசிதா பெர்னாண்டோ, ஜெப்ரி வாண்டர்சே, பிரவீன் ஜெயவிக்ரமா, ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் பங்கேற்றுள்ள இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்கலாம்: இலங்கை அதிபர் மாளிகையில் போராட்டக்காரர்கள் கைப்பற்றிய பணம் என்னாச்சு தெரியுமா?!