வீட்டில் கழித்த நான்கு மாத ஊரடங்கு நாட்களை விட, துபாயில் ஹோட்டலில் இருந்த நாட்களே கடுமையானதாக இருந்ததாக கிரிக்கெட் வீரர் முகமது ஷமி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது “ துபாயில் 6 நாட்கள் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்துதலில் இருந்தேன். நான்கு மாதங்களாக வீட்டில் இருந்த நாட்களை விட இந்த ஆறு நாட்கள் கடுமையானதாக இருந்தது. வீட்டில் எனக்கான பயிற்சிகள் மற்றும் இதர விஷயங்களில் கவனம் செலுத்தினேன். ஆனால் இந்த ஆறு நாட்கள் மிகவும் கடுமையானதாக இருந்தது. இப்போது பராவாயில்லை.
ஊரடங்கு காலத்தில் எடுத்த பயிற்சிகள் தற்போது உதவியாக இருக்கிறது. ஊரடங்கு நாட்களில் ஒரு கிரிக்கெட் வீரர் 24 மணி நேரமும் வீட்டிற்குள்ளே அடைந்து கிடப்பது என்பது கடினமான ஒன்றுதான். ஆனால் நான் என்னை அந்த நாட்களில் மிக பிஸியாக வைத்துக்கொண்டேன். விவசாயம், கிரிக்கெட்டிற்கு தேவையான பயிற்சிகள், நண்பர்களுடன் உரையாடுவது உள்ளிட்ட விஷயங்களில் கவனத்தை செலுத்தினேன்.
கிரிக்கெட் வீரர்களிடம் கிரிக்கெட் விளையாடுவதற்கான ஆர்வம் மேலோங்கி காணப்படுகிறது. உங்களால் இங்கு வந்து நாங்கள் செய்யும் பயிற்சியை காண இயலாது. இங்கு வீரர்கள் அவர்களின் 100 சதவீதத்தையும் தாண்டி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனக்கும் கே.எல்.ராகுலுக்குமான பார்ட்னர்ஷிப் நன்முறையில் உள்ளது. அது நிச்சயமாக களத்தில் வெளிப்படும்.” என்றார்.