விளையாட்டு

"என்னை கடித்ததற்கு ‘மன்னித்துவிடு சகோதரா’ என்றார் கஜகஸ்தான் வீரர்" - ரவிக்குமார் தாஹியா

jagadeesh

மல்யுத்தப் போட்டியின்போது என்னை கடித்த கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் மன்னிப்பு கேட்டார் என்று டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா தெரிவித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் ஆடவர் 57 கிலோ உடல் எடை ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் பிரிவு அரையிறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனயேவை இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் நூரிஸ்லாமை கடுமையாக போராடி வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தார் ரவிக்குமார். அப்போது அந்தப் போட்டியின் ஒரு தருணத்தில் நூரிஸ்லாம், ரவிக்குமாரின் கையை கடித்து விட்டார். இந்தப் புகைப்படம் அப்போது வைரலானது.

இப்போது இது குறித்து "டைம்ஸ் ஆஃப் இந்தியா"வுக்கு பேசியுள்ளார் ரவிக்குமார் தாஹியா. அதில் "மல்யுத்தம் என்பது இரு வீரர்கள் மோதிக்கொள்ளும் போட்டி. சண்டையின்போது இப்படி நிகழ்வது எல்லாம் சாதாரண விஷயம்தான். அவர் என்னை கடித்த விஷயத்தை அந்த அரங்கிலேயே நான் மறந்துவிட்டேன். கடித்ததால் ஏற்பட்ட வலி மட்டும் லேசாக இருந்தது. ஆனால் அவர் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை" என்றார்.

மேலும் பேசிய அவர் "பின்பு மறுநாள் பயிற்சிக்கு சென்றபோது அங்கே நூரிஸ்லாம் இருந்தார். என்னை பார்த்து கை குலுக்கினார். பின்பு என்னை கட்டிப்பிடித்து 'மன்னித்துவிடு சகோதாரா' என்றார். நானும் அவரை கட்டிப்பித்துக்கொண்டேன். இப்போது நாங்கள் நண்பர்கள். அதன் பின்பு பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் சிரித்து பேசிக்கொண்டாம்" என பெருந்தன்மையாக பேசியுள்ளார் ரவிக்குமார் தாஹியா.