விளையாட்டு

ரோகித்தை கேப்டன் ஆக்க வேண்டுமா? என்ன சொல்கிறார் ’ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’?

ரோகித்தை கேப்டன் ஆக்க வேண்டுமா? என்ன சொல்கிறார் ’ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’?

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியை நீக்கிவிட்டு, ரோகித் சர்மாவை புதிய கேப்டன் ஆக்க வேண்டும் என்ற சர்ச்சை குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதியில் இருந்து இந்திய அணி வெளியேறியதை அடுத்து, அணிக்குள் பிரச்னை என்று கூறப்பட்டது. துணை கேப்டன் ரோகித் சர்மாவின் கருத்துக்களை கேப்டன் விராத் கோலி கேட்கவில்லை என்றும் இருவருக்கு பின்னும் வீரர்கள் தனித்தனி குரூப்பாக செயல்படுவதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து குறுகிய ஓவர் போட்டிகளில் விராத் கோலியை நீக்கிவிட்டு ரோகித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து அடங்கியது.

ஆனால், தங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை என்றும் இதை யாரோ கிளப்பி விடுகிறார்கள் என்றும் இதனால் அவர்களுக்கு என்ன லாபம் கிடைக்கப் போகிறது எனத் தெரியவில்லை என்றும் விராத் கோலி கூறியிருந்தார். 

இந்நிலையில், இந்தப் பிரச்னை குறித்து தனது யூடியூப் சேனலில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர், ’ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’, சோயிப் அக்தர் பேசியுள்ளார். அதற்கு முன் ட்விட்டரில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அக்தர், ‘’கேப்டனை மாற்ற வேண்டிய அவசியமில்லை. மூன்று வித கிரிக்கெட்டுக்கும் கோலியே கேப்டனாக தொடர வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

அவர் வீடியோவில் கூறும்போது, ’’கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் கடந்த மூன்று நான்கு வருடங்களாக அவர் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அவருக்குத் தேவை, சிறந்த பயிற்சியாளர், சிறந்த தேர்வுக்குழு. இது சரியாக இருந்தால் அணியை இன்னும் சிறப்பாக வழி நடத்துவார். அதே நேரம் ரோகித் சர்மாவும் சிறந்த வீரர். மும்பை இண்டியன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்திய கேப்டன்தான். இருந்தாலும் விராத் கோலியை நீக்கினால் அது முட்டாள்தனமானவே முடிவாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.