விளையாட்டு

பாரா துப்பாக்கி சுடுதல்: இந்தியாவின் அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்று சாதனை

JustinDurai

பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் அவனி லெகாரா தங்கப் பதக்கம் வென்று மற்றொரு சாதனை படைத்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் ஸ்டேண்டிங் எஸ்ஹெச் 1 பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவை சேர்ந்த அவனி லெகாரா 250.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். போலந்தின் எமிலியா பாப்ஸ்கா (247.6) வெள்ளியும், ஸ்வீடனின் அனா நோா்மன் (225.6) வெண்கலமும் வென்றனா்.

இதன் மூலம் அவனி லெகாரா தமது முந்தைய சாதனையான 249.6 புள்ளிகளை அவரே முறியடித்திருக்கிறார். இந்த சாதனை மூலம் அவர் 2024 பாராலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதியும் பெற்றுவிட்டார். இந்தியாவுக்காக இந்தப் பதக்கத்தை வெல்வது பெருமையாக இருப்பதாகவும், தமக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவனி லெகாரா தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அவனி லெகாரா (வயது 20), கடந்த 2012ஆம் ஆண்டு நடந்த கார் விபத்தில் சிக்கி முதுகுத் தண்டுவட பாதிப்பால் மாற்றுத்திறனாளி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்: பிரெஞ்சு ஓபன் வென்ற ரஃபேல் நடால், விம்பிள்டன் தொடரில் பங்கேற்க மாட்டாரா? என்ன காரணம்?