உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் சோயிப் மாலிக். 1999-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரானப் போட்டியில் அறிமுகமான இவர், இதுவரை 261 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6975 ரன்களும் 154 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வரும் 1ஆம் தேதி ஜிம்பாப்வே சென்று அங்கு முத்தரப்பு தொடரில் விளையாடுகிறது. இன்னொரு அணியாக ஆஸ்திரேலியா பங்கேற்கிறது. இதில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணிக்கான பயிற்சி இன்று தொடங்குகிறது. அதற்கு முன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார், 36 வயதான சோயிப் மாலிக்.
அப்போது பேசும்போது, ‘2019 ஆம் ஆண்டில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிதான் எனது கடைசி, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி. அதைத் தொடர்ந்து ஃபிட்டாக இருந்தால் டி20 போட்டிகளில் கவனம் செலுத்துவேன். நான் அணியில் இருக்கும்போது, உலகக் கோப்பை டி20 (2009), சாம்பியன்ஸ் டிராபி (2017) கோப்பைகளை வென்றிருக்கிறோம். ஒரு நாள் போட்டிக்கான உலகக் கோப்பையை மட்டும் வெல்லவில்லை. அதற்காக கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அணியில் இளம் வீரர்களும் நானும் இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். 2015-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுவிட்டேன். அதற்காக வருந்துகிறீர்களா?’ என்று கேட்கிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை உடல் ஃபிட்டாக இருக்கும்வரைதான் விளையாட முடியும். நான் அதில் இருந்து விலகியதால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனால் வருத்தமில்லை’ என்றார்